தினமணி 04.05.2010
குடிநீர் இணைப்பில் முறைகேடு: மே 8-ல் நடைபெறும் விசாரணையில் புகார் தெரிவிக்கலாம்
அரவக்குறிச்சி, மே 3: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சியில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பில் முறைகேடுகள் இருந்தால், புகார் தெரிவிக்கலாம் என்று திங்கள்கிழமை தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து மனுக்கள் அனுப்பியும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதையடுத்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து, இந்தப் புகார் தொடர்பாக வருகிற 8-ம் தேதி அரவக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அரவக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, விசாரணை குறித்து திங்கள்கிழமை தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
முறைகேடு தொடர்பாக விசாரணையன்று பொதுமக்கள் பங்கேற்று புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.