தினகரன் 14.06.2010
வண்டியூர், மேலமடையில் மாநகராட்சி குடிநீர் ஒரு குடம் 8 ரூபாய் !
மதுரை, ஜூன் 14: வண்டியூர், மேலமடை பஞ்சாயத்து பகுதிகளில், மாநகராட்சி குடிநீர் குடம் ஒன்று ரூ.8க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மதுரை மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது வண்டியூர், மேலமடை பஞ்சாயத்துக்கள். சதாசிவம் நகர், தாசில்தார் நகர், பிகேஎம் நகர், அன்புநகர், கோமதிபுரம், வண்டியூர், யாகப்பா நகர், கற்பக விநாயகர் நகர், பாலாஜி நகர், குறிஞ்சி நகர், ஸ்டெல்லா நகர், அங்கையற்கண்ணி நகர் என வண்டியூர், மேலமடை பஞ்சாயத்து பரந்து விரிந்துள்ளது.
டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் முதல் ஏழை, நடுத்தர மக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும், இவ்விரு பஞ்சாயத்துகளுக்கும், சக்கிமங்கலத்தில் 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் தனித்தனியாக நீர்த்தேக்க தொட்டி மூலம் தெருக்குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால், வீட்டு புழக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தனியார் லாரிகள் மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.2க்கு விற்கின்றனர். அந்த தண்ணீரும் சுமாராகத்தான் உள்ளது.
இதனால், குடிநீருக்கு மாநகராட்சி மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீரைத்தான் மக்கள் நம்பி உள்ளனர். அந்த தண்ணீரை அதிக விலைக்கு வாங்குகின்றனர். மக்கள் தேவையை அறிந்து அண்ணாநகரில் இருந்து குடிநீரை குடங்கள், கேன்களில் பிடித்து டிரை சைக்கிள், டெம்போ வேன்களில் கொண்டு வந்து, இவ்விரு பஞ்சாயத்து பகுதிகளில் விற்கின்றனர். அவ்வாறு விற்கப்படும் குடிநீர் 18 லிட்டர் கொண்ட குடம் ஒன்று ரூ.8க்கும், 20 லிட்டர் கொண்ட கேன் ரூ.10க்கும் விற்கப்படுகிறது. அதுவும் முன்கூட்டியே சொல்லி வைத்தால்தான் கிடைக்கும். இந்த குடிநீரையும் நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஓரளவு வசதி படைத்தவர்கள் குடிப்பதற்கு மினரல் வாட்டரை பயன்படுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் மினரல் வாட்டர் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மினரல் வாட்டர் ஒரு கேன் ரூ.25க்கு விற்கப்படுகிறது. பல கம்பெனி பெயர்களில் மினரல் வாட்டர் கிடைக்கிறது. போலி மினரல் வாட்டர் வருகையும் அதிகரித்துள்ளது.
எனவே, வண்டியூர், மேலமடை பஞ்சாயத்துகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், போலி மினரல் வாட்டரை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கை.