தாமிரபரணி ஆற்று குடிநீர் கிடைக்காத பகுதியில் கோடைகால குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8 கோடியில் புதிய திட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தகவல்
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் கிடைக்காத பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படும் என்பதால் முன் கூட்டியே குடிநீர் பிரச்னை வராமல் தடுக்கும் வகையில் 8 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாநில அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் 4 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாணவர்கள் மூன்று பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்கள் நேற்று கலெக்டர் ஆஷீஷ்குமாரிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது;
கோடை காலத்தில் தாமிரபரணி ஆறு மூலம் குடிநீர் பெறும் பகுதியில் குடிநீர் பிரச்னை வராது. அதே ஆற்று தண்ணீர் இல்லாத இடங்களில் குடிநீர் பிரச்னை வரக் கூடிய சூழ்நிலை உள்ளது. அந்த பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறைக்கு 8 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இன்னும் 15 நாளில் வந்துவிடும். இதன் மூலம் ஆற்று தண்ணீர் கிடைக்காத இடங்களில் புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை கூடுதலான இடங்களுக்கு விரிவாக்கம் செய்தல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.கடலோர பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் 20 அடி தோண்டினால் தண்ணீர் வந்துவிடுகிறது. ஆனால் அந்த தண்ணீர் உப்பு தண்ணீராக உள்ளது. இதனை ஆரோ பாயிண்ட் மூலம் நல்ல தண்ணீராக சுத்திகரிப்பு செய்தும் புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.
இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக கோடை காலத்திற்கு முன்பாக முடிக்கப்பட்டு விடும்.தாமிரபரணி ஆறு மூலம் குடிநீர் பெற்று வரும் மக்களுக்கு குடிநீர் பிரச்னை எதுவும் கோடை காலத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே தற்போது பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் போதுமான தண்ணீர் தேக்கப்பட்டு விட்டன.
மணிமுத்தாறு அணை தண்ணீர் முழுவதும் குடிநீர் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்று தண்ணீர் சப்ளை செய்யும் பகுதியிலும் குடிநீர் பிரச்னை வராது.தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பாதை பிரச்னை சம்பந்தமாக மாநகராட்சியிடம் பேசி வருகிறோம். தற்போதுள்ள பாதை மிக முக்கியமாக பாதை என்பதால் அதனை அப்படியே வைத்திருக்க வேண்டும்.