மே 8 பழனியில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் வரும் மே 8ஆம் தேதி மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவுள்ளது.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சிலவாரங்களுக்கு முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து அடிவாரம் செல்லும் வழி, கிரிவீதி, சன்னதி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் இதயத்துல்லாகான், டிஎஸ்பி., குப்புராஜ், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், பழனிக்கோயில் துணை ஆணையர் இராஜமாணிக்கம், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சங்கர், வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் மே 8ஆம் தேதி அனைத்துத் துறைகளும் பங்கேற்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த முறை பழனி அடிவாரம் மட்டுமன்றி பழனி காந்திரோடு, ஆர்.எப்.ரோடு, புதுதாராபுரம் ரோடு என நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.