இரண்டு மாதங்களில் மலிவு விலை உணவகத்தில் 8 லட்சம் இட்லி விற்பனை
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி சார்பில் ஆர்.என்.புதூர், சூளை, காந்திஜிரோடு, கொல்லம்பாளையம், ஏ.பி.டி.ரோடு, கருங்கல்பாளையம், பெரிய அக்ரஹாரம், நாச்சியப்பா வீதி, சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில், மரப்பாலம் ஹெம்மிங்வே மார்க்கெட் பகுதி ஆகிய 10 இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 7 லட்சத்து 99 ஆயிரத்து 399 இட்லியும், 2 லட்சத்து 36 ஆயிரத்து 722 சாம்பார் சாதமும், ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 168 தயிர்சாதமும் விற்பனையாகியுள்ளது.
மலிவு விலை உணவகத்திற்கு தேவையான காய்கறிகள் தினசரி வெளிச்சந்தைகளில் இருந்து அன்றைய விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வரி தண்டலர்கள் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்று தேவையான காய்கறிகளை வாங்கி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு லைசென்ஸ் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு உணவகத்திற்கு 2,550 ரூபாய் வீதம் 25 ஆயிரத்து 500 ரூபாய் செலவிடப்படவுள்ளது.