உள்வட்ட சுற்றுச் சாலையில் சுங்க கட்டணத்தை 8 சதவீதம் உயர்த்தி வசூலிக்க முடிவு
மதுரை மாநகராட்சி பராமரிப்பிலுள்ள உள்வட்ட சுற்றுச் சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும், நவம்பர் 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு 8 சதவீதம் உயர்த்தி கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மதுரை மாநகராட்சி பராமரிப்பிலுள்ள உத்தங்குடி-கப்பலூர் வரையிலான உள்வட்டச் சுற்று சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் 1.11.2000 முதல் 31.10.2015ஆம் ஆண்டு முடிய வசூல் செய்துகொள்ள, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி அளித்துள்ளது. வசூலித்த கட்டணத்தை, 15 ஆண்டு காலத்துக்குள் தவணை முறையில் கடன் தொகையாக செலுத்துவதற்கும், செலுத்த முடியாதபட்சத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுங்க வரியை 8 சதவீதம் உயர்த்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 1.11.2014 முதல் 31.10.2015 முடிய உள்வட்டச் சுற்றுச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்து வரும் கட்டணத்தில் 8 சதவீதம் உயர்த்தி வசூல் செய்ய, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 1ஆம் தேதி முதல் உத்தங்குடி-கப்பலூர் வரையிலான உள்வட்டச் சுற்றுச் சாலையிலுள்ள 8 சுங்கச் சாவடிகளிலும், தற்போது வசூல் செய்து வரும் கட்டணத்துடன் 8 சதவீதம் உயர்த்தி வசூல் செய்யப்படவுள்ளது.