தினமணி 29.08.2009
திருப்பூர், ஆக.28: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகிக்க மேலும் 8 குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள 3 கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 49.24 எம்.எல்.டி. குடிநீர் பெற்று மாநகர் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இக்குடிநீர் முழுவதும் 9 மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த 9 நீர்தேக்கத் தொட்டிகளின் மொத்த கொள்ளளவு 10.35 எம்.எல்.டி.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நடைமுறை விதிகளின்படி மொத்த குடிநீர் வழங்கும் அளவில் 3-ல் ஒரு பங்கு நீர்த்தேக்க அளவு இருக்க வேண்டும். அதன்படி, மொத்தம் 16.41 எம்.எல்.டி. கொள்ளளவுக்கு நீர்த்தேக்கத்தொட்டிகள் வேண்டும். ஆனால், திருப்பூரில் 5-ல் ஒரு பங்கு என்ற கொள்ளளவிலேயே குடிநீர் தேக்கத் தொட்டிகள் உள்ளன.
இதனால் சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, திருப்பூர் மாநகரில் கூடுதலாக 8 நீர் தேக்கத்தொட்டிகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 1 எம்.எல்.டி. கொள்ளளவில் 4 நீர்தேக்கத் தொட்டிகளும், 0.50 எம்.எல்.டி. கொள்ளளவில் 4 நீர் தேக்கத் தொட்டிகளும் கட்டவும், அதற்கான பிரதான குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானம் ஆக.31-ல் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட உள்ளது.