தினமணி 26.09.2009
ராசிபுரத்துக்கு ரூ.8 கோடியில் தனி குடிநீர் குழாய்
ராசிபுரம், செப். 25: ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு காவிரி குடிநீர் கொண்டுவர தனி குடிநீர் குழாய் அமைக்க அரசு ரூ.8.03 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றார் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ்.
ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சிப் பொறியாளர் ஜி.இளங்கோவன், மேலாளர் எம்.அத்தியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்ட விவாதம்:
நகர்மன்ற உறுப்பினர் வி.பாலு: ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்கும் குடிநீர் வடிகால் வாரியம் தற்போது எவ்வளவு தண்ணீர் வழங்குகிறது.
நகராட்சி பொறியாளர்: குடிநீர் வடிகால் வாரியம் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். காவிரி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது எடப்பாடி –ராசிபுரம் இடையே 211 வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 400-க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டியுள்ளதால் தற்போது நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது.
உறுப்பினர் வி.பாலு: நகரின் தேவைக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில், வழியோரங்களில் தனியாருக்கு குடிநீர் தரக்கூடாது என குடிநீர் வடிகால் வாரியத்தை நகராட்சி கேட்டுக்கொள்ள வேண்டும்.
நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ்: குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கடிதம் கொடுக்கப்படும். தற்போது, கண்டர்குலமாணிக்கம் முதல் ஏடிசி டெப்போ வரை தனி குடிநீர் குழாய் அமைக்க ரூ.8.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால், விரைவில் குடிநீர் பிரச்னை சீரடையும்.
ராசிபுரம் இணைப்பு
சாலைக்கு ரூ.5 கோடி
உறுப்பினர் ஆர்.ஸ்ரீரங்கன்: எனது வார்டில் உள்ள கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக பந்தல் அமைத்துள்ளதால் இதனை அப்புறப்படுத்த வேண்டும்.
தலைவர்: அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ராசிபுரம் நகரில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சி.பி.கன்னைய்யா சாலையில் உள்ள சாக்கடைகள் அகலப்படுத்தி சாலை அமைக்க போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், சின்னக்கடைவீதி, பட்டணம் சாலை வழியாக பேருந்துகள் செல்லும் வகையில் போக்குவரத்துகள் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து எல்ஐசி வரை இணைப்பு சாலை அமைக்க அரசிடம் ரூ.5 கோடி கேட்டு வரைவு அனுப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.
உறுப்பினர் வி.பாலு: நகரில் உள்ள காலி மனைகளுக்கு வரிவிதிக்க அரசு ஆணை வந்துள்ளதாக தெரிகிறது. இதன் விவர நகலை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.
பொறியாளர்: ஏற்கெனவே காலி மனைகளுக்கு வரிவசூல் இருந்தது. இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் 1.10.09 முதல் காலி மனைகளுக்கு வரி விதிக்க அரசு ஆணை அனுப்பியுள்ளது. இதன் நகல் வழங்கப்படும்.
உறுப்பினர் கமால்பாஷா: எனது வார்டில் கொசுமருந்து தெளிப்பதில்லை.
தலைவர்: சுகாதார வசதி செய்வது நகராட்சி கடமை. அதிகாரிகள் இதனை தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர்கள் வி.திருப்பதி, ராம்குமார், கருணாநிதி, சுந்தரம், சுசிலா, எஸ்.விஜயலட்சுமி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் சி.குமரேசன், நகரமைப்பு அலுவலர் எம்.காசிலிங்கம், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.