தினமலர் 08.10.2010
ரூ.8 கோடியில் “லிப்ட்‘டுடன் கூடியநடைமேம்பாலம் அமைக்க திட்டம்
தாம்பரம் : தாம்பரம் சானடோரியம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய இடங்களில், பொதுமக்களின் வசதிக்காக தலா நான்கு கோடி ரூபாய் செலவில், “லிப்ட்‘டுடன் கூடிய நவீன நடைமேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தாம்பரம் சானடோரியம், “மெப்ஸ்‘ வளாகத்தில் ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், செங்கல்பட்டு, அரக்கோணம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஸ்கள், ரயில்கள் மூலம் சானடோரியம் வந்து, அங்கிருந்து ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து பணிக்கு செல்கின்றனர்.மேலும், சானடோரியத்தில் தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், தேசிய சித்த மருத்துவமனை ஆகியவையும் உள்ளன. இந்த இடங்களுக்கும் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர்.
இவர்கள் அனைவரும் அதிக வாகன போக்குவரத்து கொண்ட ஜி.எஸ்.டி., சாலையை ஆபத்தான வகையில் கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.ஜி.எஸ்.டி., சாலையை கடக்கும் போது பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். இதைத் தவிர்க்க, சானடோரியம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வகையில் சுரங்கப்பாலமோ அல்லது நடைமேம்பாலமோ அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், மெப்ஸ் அருகே பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் ஒரு நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு கோடி ரூபாய் செலவில் “லிப்ட்‘டுடன் கூடிய நவீன நடைமேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அரசிடம் நிர்வாக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,”தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்கின்றனர்.இதனால், நெரிசல் மட்டுமின்றி, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.இதை கருத்தில் கொண்டு, சானடோரியம் மற்றும் குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் ஆகிய இரண்டு இடங்களில் தலா நான்கு கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் “லிப்ட்‘டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்தப் பணி துவக்கப்படும்’ என்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “குரோம்பேட்டையில் லிப்ட் வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், இதுவரை அங்கு நடைமேம்பாலம் அமைக்கப்படவில்லை. சானடோரியம் மெப்ஸ் வளாகத்தின் அருகில் நடைமேம்பாலம் கேட்டு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அங்கு மேம்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது அறிவிப்போடு நில்லாமல், செயல்பாட்டிற்கு வரவேண்டும்’ என்றனர்.