தினமலர் 09.02.2010
80 மாநகராட்சி கடைகள் ஏலம்: வருவாயை பெருக்க நடவடிக்கை
மதுரை:பல ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த 80 கடைகளை ஏலம் விட, மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், மேலவெளி வீதி, மங்கம்மாள் சத்திரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கான்சா மேட்டு தெரு, ஜான்சிராணி பூங்கா, நன்மை
தருவார் கோயில் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், முன் கட்டப்பட்ட 80 மாநகராட்சி கடைகள் உள்ளன. இவற்றை நடத்தியவர்களில் பலர் எங்கு இருக்கின்றனர் என தெரியவில்லை. பல கடைகளுக்கு பல ஆண்டுகளாக வாடகை வரவில்லை. இக்கடைகளை அருகில் இருந்த மற்ற கடைக்காரர்கள் பயன்படுத்தினர். எனவே, மாநகராட்சி வருவாயை பெருக்கும் பொருட்டு, இக்கடைகளை மீண்டும் ஏலத்திற்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு கடைக்கும் அளவைப் பொறுத்து, ஒரு லட்சம் ரூபாய் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். இதற்கு கடைசி நாள் பிப்.23. மறுநாள் டெண்டர் திறக்கப்படும். அதே நாளில் ஏலமும் நடத்தப்படும். டெண்டருக்கு விண்ணப்பித்தவர்களே ஏலத்திலும் கலந்துகொள்ள வேண்டும். டெண்டர் அல்லது ஏலத்தொகை, இதில் எது அதிகமோ, அந்த தொகையை குறிப்பிட்டவருக்கு கடை வழங்கப்படும். விண்ணப்பங்கள், மாநகராட்சி வருவாய் பிரிவில் வழங்கப்படுகின்றன.