தினமலர் 25.06.2013
80 அடி சாலையின் பத்தாண்டு போராட்டத்துக்கு தீர்வு : பணி துவங்க நகர் ஊரமைப்பு ஆணையர் ஒப்புதல்
ஈரோடு: ஈரோடு உள்ளூர் திட்டக்குழுமத்தின் கோரிக்கைக்கு, சென்னை நகர்
ஊரமைப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கியதால், 80 அடி சாலைக்காக போராடிய, 10 ஆண்டு
போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது.ஈரோடு மாநகராட்சி பிரப் ரோடு
மாநகராட்சி அலுவலகம் முன்பாக, மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த
காலத்தில் பிரப் ரோட்டில் இருந்த, பெரியார் நகர், 80 அடி சாலைக்கு செல்லும்
வழித்தடமாக, வணிக வரித்துறை அலுவலகத்தை ஒட்டியபடி பாதை இருந்துள்ளது.காலப்போக்கில்
பிரப் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் கல்வி குழும விளையாட்டு
மைதானமாக மாறியது. ஈரோடு மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு அதிக வருவாய்
ஈட்டித்தரும் கோவில்களில் பெரியமாரியம்மன் கோவில் முதலிடம் வகிக்கிறது.
மக்களிடம்
வரவேற்பை பெற்ற மாரியம்மன் கோவில் விரிவாக்கம் செய்யவும், அதேசமயம் நகரின்
வளர்ச்சியால் பிரப் ரோட்டில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை
தவிர்க்கும் பொருட்டு, ரயில் நிலையத்துக்கு குறுக்குச்சாலை தேவைப்பட்டது.நகரின்
கட்டமைப்பை மாற்றிட முயற்சிகள் மேற்கொண்டபோது, பிரச்னை பூதகரமாக
வெடித்தது. 12.66 ஏக்கர் அரசு நிலம், சி.எஸ்.ஐ., நிர்வாகத்துக்கு சொந்தமான
இடம் என தெரிவித்தனர்.கோவிலை விரிவாக்கம் செய்யவும், ஆக்ரமிப்பு இடத்தை
மீட்கவும், 80 அடி சாலையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என, 10 ஆண்டாக
பெரியமாரியம்மன் கோவில் மீட்பு குழு போராடி வருகின்றனர்.
இதனிடையே
மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 80 அடி சாலையை புதுப்பிக்க
தீர்மானம் நிறைவேற்றி, 50 லட்சம் ரூபாய் நிதியையும் ஓதுக்கீடு செய்தனர்.
சி.எஸ்.ஐ.,
நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், வருவாய்த்துறையின் ஆவணங்களை பெற்று, மாவட்ட
நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே
உள்ளூர் திட்டக்குழுமத்திடம், 80 அடி சாலை பணியை மாநகராட்சி ஒப்புதல்
கோரியது.
தவிர, வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ளும்படி மாநகராட்சி
கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், வருவாய்த்துறை ஆவணத்தில் பிரச்னைக்குறிய
நிலம் அரசு புறம்போக்கு நிலம் என உள்ளூர் திட்டக்குழுமம் திட்டவட்டமாக
அறிவித்தது.
இதனிடையே முதல்வரின் தனி அலுவலருக்கு அனுப்பப்பட்ட
கடிதத்துக்கு வழங்கிய பதிலில், 80 அடி அகல திட்ட சாலை, ஈரோடு விரிவு
அபிவிருத்தித் திட்டம் எண் 2ல் அமைகிறது. சென்னை, நகர் ஊரமைப்பு ஆணையர்,
அவர்களின் செயல்முறை கடிதத்தில் நகர் ஊரமைப்பு சட்டத்தின் ஒப்புதல்
அளிக்கப்பட்டு, விரிவு அபிவிருத்தி திட்டம் வரை படங்களுக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டது.அரசாணை வெளியிடப்பட்டதும், ஈரோடு மாநகராட்சியால் சாலை
அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். 10 ஆண்டு
போராட்டத்துக்கு தீர்வாக, கடந்த, 12ம் தேதி, நகர் ஊரமைப்பு ஆணையர், உள்ளூர்
திட்டக்குழுமத்துக்கு ஒப்புதல் வழங்கியதுடன், அதை அரசாணையாகவும்
வெளியிட்டுள்ளனர்.
உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு ஒப்புதல் வழங்கியதன்
மூலம், மாநகராட்சியில் தீர்மானிக்கப்பட்ட, 80 பணிகள் துவங்கிட அனுமதி
கிடைத்தது உறுதியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மூலம்
ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்தி அடுத்து கட்ட, மாநகராட்சியின் பணிகளை
துவங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.