தினகரன் 30.06.2010
ஊசிமலை குடிநீர் ஆதார மேம்பாடு ரூ.80 லட்சத்தில் திட்டப்பணி அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
மஞ்சூர், ஜூன் 30: ஊசிமலை குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சீரான குடிநீரை வினியோகிக்க ரூ.80 லட்சம் மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியின் குடிநீர் தேவையை ஊசிமலை, அம்மக்கல், கட்லாடா, அப்புநாய், ஒசாட்டி நீர் தேக்கங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
ஊசிமலை நீர் ஆதாரம் மூலம் மஞ்சூர், கரியமலை, மஞ்சூர் அட்டி, மணிக்கல், கண்டிபிக்கை உள்ளிட்ட 15 கிராமங்களில் பொது குழாய்கள், தனியார் இணைப்புகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஊசிமலை நீர் ஆதாரத்தில் இருந்து மஞ்சூரிலுள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் கொண் டு செல்ல அமைக்கப்பட்ட பிரதான குழாயின் பல்வேறு பகுதிகளிலும் துருபிடித்து உடைந்து காணப்படுகிறது. இதனால், அதிகளவில் நீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
மேலும், ஊசிமலை நீர் ஆதாரத்தை தூர் வார நடவடிக்கை எடுக்காததால் போதிய அளவு நீரை தேக்கி வைக்க முடியாத நிலை காணப்படுகிறது. கடந்தாண்டு நவம்பரில் பெய்த கன மழையால் ஊசிமலை நீர் ஆதாரத்தின் தடுப்பணை முற்றிலுமாக உடைந்தது. குடிநீருக்காக மஞ்சூர் மற்றும் அதை சுற்றிலுள்ள கிராமமக்கள் அவதியுற்று வருகின்றனர். மேலும் கிராமமக்கள் அதிருப்தி அடைந்து சமீப காலமாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்களில் சீரான குடிநீர் வினியோகத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றப்பட்டது.
இதுகுறித்து கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன் கூறியதாவது:
கீழ்குந்தா பேரூராட்சியில் அனைத்து பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சீராகவும், தடையின்றியும் குடிநீர் வழங்கும் பொருட்டு குறைந்த பட்ச தேவை திட்டத்தின் கீழ் குடிநீர் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள ஊசிமலை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊசிமலை குடிநீர் ஆதாரத்தை தூர் வாரி புதிய தடுப்பணை கட்டுவதுடன் ஊசிமலை நீர் ஆதாரத்தில் இருந்து மஞ்சூரிலுள்ள குடிநீர் தேக்க தொட்டி வரையிலான 6 கி.மீ தூரத்திற்கு புதிய குழாய்களை அமைக்க வேண்டும். குடிநீரை தேக்கி வைக்க மஞ்சூரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் குடிநீர் தொட்டி கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக ரூ.80 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றார்.