தினமணி 30.07.2010
80 அடி சாலை திறப்பு: தமிழக அரசுக்கு நன்றி
ஈரோடு, ஜூலை 29: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 80 அடி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடுவது தொடர்பான அரசாணை வெளியிட்டதற்காக, தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்–வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
முதல்வர் கருணாநிதிக்கு கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் மற்றும் நிர்வாகிகள் அனுப்பியுள்ள கடித விவரம்:
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பிரப் சாலை மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் 80 அடி சாலையைத் திறந்துவிட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இச்சாலையை திறந்து விடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகளைத் துவக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகனங்களின் எரிபொருள் தேவையும் வெகுவாகக் குறையும்.
தொழில், வணிகமும் மேம்படும். இதற்காக முதல்வர், துணை முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொழில்–வணிகக் கூட்டமைப்பில் உள்ள 95 சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.