தினமலர் 31.08.2010
கோவில்பட்டி நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு விரைவில் ரூ.82 கோடி அனுமதி
தூத்துக்குடி : கோவில்பட்டி நகராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு விரைவில் அரசு அரசு அனுமதி கிடைத்துவிடும் என்றும், கலைஞர் காப்பீடு திட்ட ஆபரேஷன் மேற்கொள்ள தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் “ஸ்பெஷல்‘ வார்டு உருவாக்க கலெக்டர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;முதல்வர் தலைமையில் சென்னையில் நடந்த இரண்டு நாள் மாநாட்டில் கலைஞர் காப்பீடு திட்டத்தில் அதிகமான இலவச ஆபரேஷன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நம் பகுதியில் உள்ளவர்களுக்கு இருதய ஆபரேஷன் மேற்கொள்ள கோவை, சென்னை போன்ற இடங்களுக்கு தான் அனுப்ப வேண்டியிருக்கிறது.
இந்த பகுதியில் இதுபோன்ற சில நோய்களுக்கு ஆபரேஷன் செய்ய வசதி இருந்தால் கூடுதல் பயனாளிகளை இதன் மூலம் பயன்பெறச் செய்யும் வாய்ப்பு இருக்கும். அந்த வாய்ப்பு இந்த பகுதியில் இல்லாமல் இருக்கிறது.இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கலைஞர் காப்பீடு திட்டத்திற்கு என்று ஸ்பெஷல் வார்டு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த வார்டில் அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் ஏற்படுத்தவேண்டும். இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்று முதல்வர் மாநாட்டில் தெரிவித்தேன். மிக விரைவில் இதற்கான அனுமதி தருவதாக கூறியுள்ளனர்.
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் மக்கள் குடிநீர் பிரச்னையை போக்கும் வகையில் சீவலப்பேரியில் இருந்து கோவில்பட்டி நகராட்சிக்கு மட்டும் தனியாக குடிநீர் திட்டம் 82 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் 80 சதவீதம் மத்திய அரசு நிதியும், 10 சதவீதம் மாநில அரசு நிதியும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு நிதியும் பயன்படுத்தப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சிக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தினேன். இதற்கு மிக விரைவில் அனுமதி வந்துவிடும் என்று தெரிவித்தனர்.
விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதியில் களிமண் அதிகமாக இருப்பதால் ரோடு போடும் பணியில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் களிமண் முழுவதையும் அகற்றிய பிறகு தான் ரோடுபோடும் பணியினை செய்ய வேண்டியுள்ளது.
இதனால் மற்ற பகுதியை விட இங்கு அதிகமாக செலவு ஆவதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு பகுதிக்கும் பிற இடங்களை விட ரோடு பணிக்கு கூடுதல் ரேட் வழங்க வேண்டும் என்று முதல்வர் மாநாட்டில் தெரிவித்தேன். அதனையும் பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகள் 15 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இதில் 4 ஆயிரம் பேர் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் 4 ஆயிரம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஸ்பெஷல் கேம்ப் நடத்தி பயனாளிகள் அடையாளம் காணப்பட உள்ளனர். இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ துரை.ரவிச்சந்திரன், இலவச கலர்டிவி திட்ட துணை ஆட்சியர் மீராபரமேஸ்வரி, மக்கள் குறைதீர்க்கும் பிரிவு தனித்துணை ஆட்சியர் லதா, துணை ஆட்சியர் (பயிற்சி) இந்துமதி, பி.ஆர்.ஓ பாலசக்திதாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர