தினமலர் 05.01.2010
பொள்ளாச்சியில் 8.4 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலைப்பள்ளி கட்டடம் திறப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 8.4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடம் நேற்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடத்தில் செயல் பட்டு வந்தது. பெண்கள் பள்ளிக்கு கோட்டூர் ரோட்டில் 11 ஏக்கர் பரப்பில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி முடிவு செய்தது. தற்போது, 8.42 கோடி மதிப்பீட்டில் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள் ளது. இரண்டு மாடி கட்டடத்தில் ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதான வசதியுடன் புதிய பள்ளி கட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டத்திற்கு மாநிலத்தில் முதல் முறையாக “ஐஎஸ்ஓ‘ தரச்சான்று பெறப் பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தை துணை முதல்வர் ஸ்டாலின் நவம்பர் மாதம் திறந்து வைத்தார். புதிய பள்ளி கட்டடத்தில் அனைத்து அடிப் படை வசதிகளும், மாணவிகளுக்கான இருக்கை வசதிகளும் நிறைவு செய்யப்பட்ட நிலையில் நேற்று (4ம் தேதி) பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. வகுப்புகள் துவங்கும் முன்பாக புதிய கட்டடத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரவடிவேல் வரவேற்றார். நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி, நகராட்சி கமிஷனர் வரதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.. ராஜூ பள்ளியின் சிறப்பு பற்றியும், சுகாதாரத்தையும், தூய்மையையும் பேணிக்காத்து கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
அதன்பின், வகுப்புகள் துவங்கப்பட்டது. புதிய பள்ளிக்கட்டடம் செயல்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதை நகராட்சிகளின் நிர்வாக செயலாளர் நிரஞ்சன் மார்டி, நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் செந்தில்குமார், கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.பள்ளியின் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், தலைமை ஆசிரியர் அறை, ஆலோசனை கூட்ட அரங்கு, பார்வையாளர்கள் அறைகளை பார்வையிட்டனர். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை நகராட்சிகளின் நிர்வாக செயலாளர் திறந்து வைத்தார். பள்ளியின் பின்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வரைபடத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.