தினமணி 20.04.2010
கொரடாச்சேரி பேரூராட்சி இடைத்தேர்தல் 84.4 சத வாக்குப்பதிவு
திருவாரூர், ஏப். 19: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் 84.4 சத வாக்குகள் பதிவாகின.
கொரடாச்சேரி பேரூராட்சித் தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த செந்தில் 2007-ம் ஆண்டில் கொரடாச்சேரியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலர் பூண்டி. கே. கலைசெல்வன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, பேரூராட்சி மன்றக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்படாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஒட்டுமொத்தமாக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 14 பேரும் 2008-ம் ஆண்டில் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். எனவே, கொரடாச்சேரி பேரூராட்சி மன்றத்தைக் கலைத்து அரசு உத்தரவிட்டது. இதன் பின்னர், கொரடாச்சேரி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்த மார்ச் மாதத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 31 வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு பரிசீலனை நடைபெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 84.4 சதம் பேர் வாக்களித்தனர்.
பலத்த பாதுகாப்பு: கொரடாச்சேரியில் ஏற்கெனவே அதிமுக, திமுக இடையே பிரச்னைகள் இருப்பதால், வாக்குப்பதிவின் போது அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாவண்ணம் நூற்றுக்கணக்கான போலீஸôர் கொரடாச்சேரி முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவி வைக்கப்பட்டு, அனைத்து வாக்காளர்களும் சோதனைக்குப் பிறகே வாக்குச்சாவடி மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நுண் பார்வையாளராக ஆணையத்தின் சட்ட ஆலோசகர் பாஸ்கர் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.