மிகக் குறைவான வரித் தொகை பாக்கியை வசூலிக்க கூடுதல் கவனம் : இதுவரை 85% வரி வசூல்
கோவை மாநகராட்சிப் பகுதியில் மிகக் குறைவான வரித் தொகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து அவற்றை வசூலிக்க கூடுதல் கவனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சொத்து வரி இதுவரை 85 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் சு.சிவராசு தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. அதிகபட்சமான சொத்து வரி மத்திய மண்டலத்திலும் குறைந்தபட்ச சொத்து வரி தெற்கு மண்டலத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சேர்த்து நடப்பு ஆண்டுக்கான சொத்துவரி கேட்பு ரூ.103.69 கோடி. வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.36 கோடி. இதுவரை வசூலான தொகை ரூ.88 கோடி. நிலுவைத் தொகையில் ரூ.15.33 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு சொத்து வரி 87 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 85 சதவீத சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னமும் 4 நாள்கள் உள்ள நிலையில் வரி வசூல் விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று மாநகராட்சி துணை ஆணையர் சு.சிவராசு தெரிவித்தார்.