தினமணி 08.02.2010
8600 குழந்தைகளுக்கு 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கல்
போடி, பிப். 7: போடி நகராட்சியில் 2-ம் கட்டமாக 8,600 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போடி நகராட்சியில் 33 வார்டுகளில், கடந்த ஜனவரி 10-ம் தேதி முதல் கட்டமாக போலியோ சொட்டுமருந்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 804 குழந்தைகள் பயன் பெற்றனர்.
2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. புதூர், போஜன் பார்க், கீழத்தெரு, சர்ச் தெரு, 10-வது வார்டு நகராட்சிப் பள்ளி, கே.எம்.எஸ்.லே–அவுட், வெங்கிட்டம்மாள் பார்க், குப்பழகிரி தோட்டம், நகராட்சி காலனி, அண்ணா துவக்கப் பள்ளி, பெரியாண்டவர் ஹைரோடு, நகராட்சி குடியிருப்பு, போடி மெட்டுப் பாதை, செüடம்மன் கோயில் தெரு, மோகன் நாராயணசாமி லே–அவுட், டி.வி.கே.கே. நகர், நகராட்சி தங்கும் விடுதி ஆகிய இடங்களில் உள்ள சத்துணவு மையங்களிலும், சுப்புராஜ் நகர் காமராஜ் வித்யாலயம், சேது மறவர் திருமண மண்டபம், அரசு மருத்துவமனை, நகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போடி பஸ் நிலையத்தில், தர்மத்துப்பட்டி ஏ.எச்.எம். டிரஸ்டுடன் இணைந்து அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையத்தில், ஞாயிற்றுக்கிழமை போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் சொட்டுமருந்து வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தேனி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் கே. சரவணக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். போடி பகுதியில் 23 மையங்களில் 92 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
சொட்டுமருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, வர்கீஸ், சென்றாயன், எ.எச்.எம். டிரஸ்ட் சமுதாய சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த கணேசன், பிரேமா, மஞ்சு, அம்சவள்ளி, கோபிராஜன், ரவி ஆகியோர் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையிலó மாவட்டத்தில் கிராம பகுதியில் 660 மையங்களும், நகர்ப் பகுதியில் 126 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 340 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 10-ம் தேதி 1 லட்சத்து 13 ஆயிரத்து 249 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்தப் பணியில் 3 ஆயிரத்து 490 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 17 நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மலைப் பகுதிகள், போக்குவரத்து இல்லாத பகுதிகளிலும் சொட்டு மருந்து வழங்க 62 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்றார்.