தினமணி 22.09.2009
9-வது உலகத் தமிழ் மாநாடு: இணையதளம் தொடங்க முடிவு .
9-வது உலகத் தமிழ் மாநாடு குறித்து, சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
9சென்னை, செப். 21: உலகத் தமிழ் மாநாடு குறித்து, அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழறிஞர்களுக்கு தகவல்களைத் தர இணையதளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்த முடிவு, முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உலகத் தமிழ் மாநாட்டினை நடத்துவது குறித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் நெபுரு கரோசீமாவுடன் தொடர்பு கொள்வது குறித்தும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவர் வா. செ. குழந்தைசாமி இதற்காக, அதன் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அதிலே மாநாட்டுக்கான ஒப்புதலைப் பெறுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உலகத் தமிழ் மாநாடு குறித்து அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழறிஞர்களுக்கு அவ்வப்போது தகவல்களைத் தர “இணையதளம்‘ ஒன்றை பதிவு செய்து தொடங்குவதென்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆனந்த கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், தஞ்சைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ம.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.