தினகரன் 30.08.2012
உடன்குடி பகுதியில் ரூ.9 கோடியில் புதிய குடிநீர் திட்டம்
உடன்குடி, : உடன்குடியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ9கோடியில் புதியதிட்டம் செயல்படுத்தப்போவதாக டவுன் பஞ். தலைவி ஆயிஷாகல்லாசி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததன் காரணமாக ஆற்றில் தண்ணீர் இல்லை. உடன்குடி – சாத்தான்குளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் குடிநீர் குறைவாகவே உள்ளது.
பொதுமக்கள் குடிநீரை மின்மோட்டார் வைத்து உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். அதனால் மின்மோட்டார் வைத்து பயன்படுத்துவது தெரியவந்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். உடன்குடி நகர பகுதியில் தடையில்லாமல் தினசரி குடிநீர் சப்ளை செய்ய குரங்கணி பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து சப்ளை செய்ய ரூ.9 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இந்தப்பணிகள் முடிந்து குடிநீர் சப்ளை செய்யும் போது உடன்குடி நகர பகுதியில் நிரந்தமாக குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.