9 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, ஆட்சியர் விஜய் பிங்ளே தலைமை வகித்தார். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால், தண்டராம்பட்டு, தானிப்பாடி, கலசப்பாக்கம், சந்தவாசல், சேவூர், எஸ்.வி.நகரம், தேவிகாபுரம், தெள்ளாறு ஆகிய ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் விஜய் பிங்ளே ஆலோசனை நடத்தினார்.
இவ்வூராட்சிகள் அனைத்தும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையையும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருவாயும் கொண்டுள்ளன.
இவ்வூராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, செயல் அலுவலர், எழுத்தர்கள், வரி வசூலிப்பவர்கள், குடிநீர் பணியாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், பொது சுகாதாரப் பணியாளர் உள்ளடங்கிய புதிய நிர்வாக அமைப்பு தோற்றுவிக்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளின் நிதியைப் பெற்று பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், மின்விளக்கு பராமரிப்பு போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என்று கூட்டத்தில் ஆட்சியர் விஜய் பிங்ளே தெரிவித்தார்.
கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்வகுமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அமுதா குமாரசாமி (திருவண்ணாமலை), டி.ஜானகிராமன் (தண்டராம்பட்டு) மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.