மேலும் 9 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள்
மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் உட்பட மேலும் 9 மாநகராட்சிகளில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வரின் உரை,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை தமிழக அரசு திறந்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்.
இந்த உணவகங்களிலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்றார் முதல்வர்.