தினமணி 16.05.2013
அம்மா உணவகம் 9 மாநகராட்சிகளுக்கு விரிவாக்கம்
சென்னையைத் தொடர்ந்து மேலும் ஒன்பது
மாநகராட்சிகளுக்கு அம்மா உணவகம் விரிவுபடுத்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தார். மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மதிய வேளையின்
போது கூடுதலாக எலுமிச்சை அல்லது கருவேப்பிலை சாதம் ரூ.5-க்கு விற்கப்படும்
எனவும் அவர் அறிவித்தார்.
பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை
திறந்து வைத்துள்ளேன். இந்தத் திட்டத்தின்படி, காலை 7 மணி முதல் 10 மணி வரை
இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3
மணி வரை சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை
செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பொது மக்கள் மத்தியில் அமோக
வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனைத்து மாநகராட்சிகள்: மலிவு விலை உணவகத் திட்டம், தமிழகத்தின் இதர
பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மதுரை,
திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி,
வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் முதல் கட்டமாக ஒவ்வொரு
மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் இந்த மாத இறுதிக்குள்
திறக்கப்படும்.
இந்த உணவகங்களிலும் சென்னையில் உள்ள உணவகங்களைப் போன்றே காலை 7 மணி
முதல் 10 வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி
முதல் பிற்பகல் 3 மணி வரை சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம்
ரூ.3-க்கும் வழங்கப்படும்.
சென்னையில் கூடுதல் வசதி: சென்னை மாநகராட்சியில் இப்போது செயல்பட்டு
வரும் உணவகங்களில் காலை சிற்றுண்டியில் கூடுதலாக பொங்கல் சேர்க்க வேண்டும்
என்றும், மதிய உணவின் போது கூடுதலாக சாத வகைகளைச் சேர்க்க வேண்டும்
என்றும், மாலை நேரங்களில் சப்பாத்தி விநியோகிக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள்
வந்துள்ளன.
பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று, சென்னை மாநகரத்தில் செயல்படும்
அனைத்து மலிவு விலை உணவகங்களிலும், காலை சிற்றுண்டியின் போது இட்லி தவிர
பொங்கல்-சாம்பார் ரூ.5-க்கும், மதிய உணவின் போது எலுமிச்சை சாதம் அல்லது
கருவேப்பிலை சாதம் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படும்.
சப்பாத்தி-குருமா: மாலை நேரங்களில் விற்பனை செய்வதைப் பொறுத்த வரையில்,
சப்பாத்தி தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்களை
ஒப்பந்தப் புள்ளி மூலம் கொள்முதல் செய்வதற்கு தேவைப்படும் கால அவகாசத்தைக்
கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு செப்டம்பர் முதல் சென்னை மாநகராட்சி நடத்தி
வரும் 200 மலிவு விலை உணவகங்களிலும் மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி
மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா ரூ.3-க்கு விற்பனை செய்யப்படும்
என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
200 வார்டுகள்…ஒரு கோடி இட்லிகள்…
சென்னையில் 200 வார்டுகளிலும் அமைந்துள்ள அம்மா உணவகங்களில் இதுவரை ஒரு
கோடியைத் தாண்டி இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விரிவாக்கப்பட்ட
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் தலா ஒரு அம்மா உணவகம் கடந்த
19-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை சாந்தோமில் உள்ள உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதன் பின், இந்த உணவகங்கள் சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும்
விரிவாக்கப்பட்டது.
200 வார்டுகளிலும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இட்லிகள்
விற்கப்படுகின்றன. அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை (மே 14
வரை) ஒரு கோடியே 65 லட்சத்து 7 ஆயிரத்து 996 இட்லிகளும், 32 லட்சத்து 81
ஆயிரத்து 302 சாம்பார் சாதங்களும், 20 லட்சத்து 61 ஆயிரத்து 9 தயிர்
சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும்
அம்மா உணவகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சியில் மட்டும்
ஆண்டுக்கு ரூ.34.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.