9 மாநகராட்சிகளில் மலிவு விலை ‘அம்மா’ உணவகங்கள்: காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (2.6.2013) தலைமைச் செயலகத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவினை வயிறார உண்ணும் வகையில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் “அம்மா உணவகங்களை” காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்து, சென்னை மாநகரில் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்று செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் கூடுதல் உணவு வகைகள் வழங்கப்படுவதை துவக்கி வைத்தார்.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சத்தான உணவு வகைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைத்திட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகரில் வாழும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் “அம்மா உணவகங்கள்” முதலமைச்சரால் 19.2.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டன.
“அம்மா உணவகங்களில்” காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஏழை, எளிய சாதாரண மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளதால் இதனை தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 “அம்மா உணவகங்களை” முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் காலை சிற்றுண்டியில் கூடுதலாக பொங்கலும், மதிய உணவின் போது கூடுதல் சாத வகைகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, சென்னை மாநகரில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும், காலை சிற்றுண்டியின் போது இட்லி தவிர, பொங்கல் – சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 200 அம்மா உணவகங்களில் கூடுதல் உணவு வகைகளான பொங்கல் – சாம்பார் மற்றும் கறிவேப்பிலை / எலுமிச்சை சாதம் ஆகியவை வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்,நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.