தினமணி 31.12.2009
சென்னையுடன் 9 நகராட்சி இணைப்பு: தமிழக அரசு உத்தரவு
சென்னை, டிச. 29: சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட 9 நகராட்சிகளும், புழல், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளும், 25 ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி இப்போது 174 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தரமான சாலைகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியுள்ளன.
போதுமானதாக இல்லை… சென்னை பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வரும் சேவைகளின் நிலை பெருமளவில் வேறுபடுவதோடு அவை போதுமானதாக இல்லை. இந்த நிலையில், சென்னை மாநகருக்கு அருகே மற்றும் தொடர்ச்சியாக அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து இப்போதைய சென்னை மாநகராட்சிப் பகுதியை விரிவாக்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சில நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.
இணைக்கப்படும் நகராட்சிகள்: கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் (அனைத்தும் திருவள்ளூர் மாவட்டம்), ஆலந்தூர், உள்ளகரம்} புழுதிவாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்).
பேரூராட்சிகள்: சின்ன சேக்காடு, புழல், போரூர் (திருவள்ளூர் மாவட்டம்), நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம்).
ஊராட்சிகள்: இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம் (அனைத்தும் திருவள்ளூர் மாவட்டம்), முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம்– துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி (அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்டம்).
பாதிக்காத வகையில்… தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2011}ல் முடிவடைந்தவுடன் புதிய மாநகராட்சி அமைக்கப்படலாம்.
உத்தேசிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் புதிய வார்டுகள் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்படலாம். சென்னை மாநகராட்சியின் இப்போதைய வார்டுகளும் மக்கள் தொகையின் மக்கள் தொகையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படலாம்.
ஆணையருக்கு புதிய பணி… தமிழகத்தில் புதிதாக மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறை, சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கும் பின்பற்றப்படும்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கான வார்டு எல்லைகளை நிர்ணயித்தல், மண்டலங்கள் அமைத்தல், இப்போதைய வார்டுகளை மாற்றியமைத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சி ஆணையர் மேற்கொள்வார்.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கென தேவையெனில் சிறப்பு அதிகாரியை பணியமர்த்திக் கொள்ள ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
சிறப்பு அதிகாரி தனது அறிக்கையை ஆறு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.