தினமலர் 14.05.2010
துப்புரவு பணி டெண்டரில் 9 நிறுவனம் பங்கேற்பு
சேலம்: சேலம் மாநகராட்சியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 21 வார்டுகளில் தனியார் மூலம் துப்புரவு பணி மேற்கொள்வதற்கான டெண்டர் விடப்பட்டது. ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஒன்பது நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன.
சேலம் மாநகராட்சியில் 1,400 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பல இடங்களில் துப்புரவு பணியாளர்கள் தங்கள் பணியில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியின் ஒரு பகுதி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுக்கு முன் சேலம் மாநகராட்சியில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சேலம் மாநகராட்சியின் இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33, 47 ஆகிய 21 வார்டுகள் ஸ்வச்சதா கார்ப்பரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்வச்சதா கார்ப்பரேஷனில் 700 பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப் பட்டது. நடப்பு 2010 ஜூன் மாதத்துடன் ஸ்வச்சதா கார்ப்ரேஷனின் ஒப்பந்த காலம் முடிகிறது.
சேலம் மாநகராட்சி சார்பாக தனியார் நிறுவனம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த துப்புரவு பணிகள் மீண்டும் தனியார் வசமே ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் ஆன்–லைன் மூலம் துப்புரவு பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியானது. சில மாதங்களுக்கு முன் சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் பாதாளசாக்கடை திட்டத்துக்காக நடந்த டெண்டரில் குளறுபடி ஏற்பட்டது.
அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன் பாதாளசாக்கடை திட்டத்துக் கான டெண்டர் சென்னையில் நடத்தப்பட்டது. மேலும், மெகா பட்ஜெட் திட்டமான தனிக் குடிநீர் திட்டத்துக்கும் கடந்த மே 5ம் தேதி சென்னையில் டெண்டர் விடப்பட்டது. இந்த சூழலில் துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான டெண்டரை சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நேற்று காலை 9 மணிக்கு இப்பணிக்கு திறந்த வெளி டெண்டர் கோரப்பட்டது. விண்ணப்பங்களை பெறுவதற்கான பெட்டி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்துக்கு அருகில் வைக்கப்பட்டது. பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒன்பது முன்னணி நிறுவனங்கள் துப்புரவு பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளன. சேலம் மாநகராட்சி அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வருகின்றனர். பரிசீலனைக்கு பிறகு 21 வார்டு துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.