தினமலர் 21.03.2013
90 ஆண்டுகளை கடந்த பிரிட்டிஷ் பாதாள சாக்கடை சேதமானதால் மாற்ற முடிவு
மதுரை:மதுரை மாநகராட்சியில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட
பாதாள சாக்கடை திட்டம், 90 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. “கடந்த
வாரம் ரோடு போட்டாங்க… எங்கே போச்சுனே தெரியலே…’, “போன மாசம் தான்,
இந்த பில்டிங் கட்டினாங்க… அதுக்குள்ள விரிசலாயிருச்சு…’, காலையில தான்
வங்கிட்டு வந்தேன்… அதுக்குள்ள பொகஞ்சு போச்சு…’ இவை தான், அரசு
சார்ந்த பணிகள், பொருட்களை அனுபவித்த சராசரி மக்களின் பேச்சு. கோடிகளை
கொட்டி, ஆடம்பரமாய் தொடங்கும் அரசுப் பணிகள், சில நாட்களிலேயே “புஸ்’ ஆவது,
வாடிக்கை. தரமற்ற பணிகளால், நீண்ட காலம் பயன்படுத்த முடிவதில்லை.ஆனால்,
பிரிட்டிஷ் ஆட்சியில், மக்களுக்காய் பணிகள் நடந்த போது, அதில் தரம்
இருந்தது; அந்த வகையில், ‘ காலத்தில் அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடை, 90
ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 1924ல், தெற்குமாசி வீதி உள்ளிட்ட
நகரின் முக்கிய பகுதிகளில் செங்கல் கற்களால் ஆன பாதாள சாக்கடை திட்டத்தை,
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அமைத்தனர். சுதந்திரம் பெற்ற பிறகு,
நகராட்சியிலிருந்து மாநகராட்சியாய் பல பரிணாமங்களை மதுரை பார்த்த பிறகும்,
நம்முடன் பயணித்துக் கொண்டிருந்தது, பிரிட்டிஷ் பாதாள சாக்கடை. மக்கள் தொகை
அதிகரிப்பால் நாளடைவில் கழிவுநீர் வெளியேற்றம் அதிகரித்து, தெற்குமாசி
வீதி பகுதியில், அடிக்கடி சாக்கடை பொங்கியது. நேற்று, மாநகராட்சி
அதிகாரிகள் தோண்டி பார்த்த போது, பாதாள சாக்கடை சேதமடைந்து அதிலிருந்த
செங்கல்கற்கள் சரிந்திருந்தன. அதை மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
நகர் பொறியாளர் மதுரம் கூறுகையில், “”1924ல் அமைக்கப்பட்ட பழமையான சாக்கடை
சேதமடைந்து விட்டது. அதை சரிசெய்தால் மட்டுமே, வருங்காலங்களில் பாதுகாப்பாக
இருக்கும் என்பதால், பணியை தொடங்கியுள்ளோம். நான்கு நாட்களில், புதிய
பாதாள சாக்கடை அமைக்கப்படும், என்றார்.