ரூ.90 லட்சத்தில் புதிய மின் உற்பத்தி நிலையம்: நகராட்சி சேர்மன் தகவல்
பள்ளிபாளையம்: “”நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு, 90 லட்சம் ரூபாய் மதிப்பில், 440 யூனிட் மின் உற்பத்தி நிலையம், விரைவில் அமைக்கப்படும்,” என, கவுன்சில் கூட்டத்தில், நகராட்சி சேர்மன் வெள்ளியங்கிரி பேசினார்.
பள்ளிபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்ரமணி, கமிஷனர் முத்து வெங்கடேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:
பாலமுருகன் (தி.மு.க.,): எனது வார்டில், குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அதனால், மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.
வெள்ளியங்கிரி (சேர்மன்): ஓடப்பள்ளி தடுப்பணையில், குடிநீர் தேவைக்காக மூன்று மீட்டர் அளவுக்கு தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், ஆழ்துளை குழாய் கிணறுகளில் தண்ணீர் தேவையான அளவு கிடைக்கும்.
சுப்ரமணி (துணைத் தலைவர்): கோடை காலத்தை கருத்தில் கொண்டு, நகராட்சி முழுவதும் தேவைப்படும் இடங்களில், ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்படும்.
செல்வம் (சுயே.,): காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. அதனால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை.
துணைத் தலைவர்: சாயப்பட்டறை கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்ட கலெக்டர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலமும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
சேர்மன்: தினமும் ஐந்து டன் குப்பைக்கழிவு பொருட்கள் கொண்டு, 440 யூனிட் மின் உற்பத்தி செய்ய, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அதற்கான பணி, விரைவில் துவங்கப்படும். இதுபோன்ற மின் உற்பத்தி நிலையம், தமிழகத்தில், இரண்டாவதாக, இங்கு அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விவாதம் நடந்தது.