தினமணி 28.06.2013
தினமணி 28.06.2013
மேலும் 90 “அம்மா’ உணவகங்கள் திறக்க ஏற்பாடு
மதுரையில் மேலும் 90 இடங்களில் அம்மா உணவகங்கள்
திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அரசு அனுமதி கிடைத்தவுடன்
இந்த உணவகங்கள் திறக்கப்படும் என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா
தெரிவித்தார்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தெற்கு மண்டலத் தலைவர் பெ.
சாலைமுத்து பேசுகையில், மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்டுள்ள அம்மா
உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உண்மையான
ஏழைகள் சாப்பிடுகின்றனர். இந்த உணவகங்களில் காலையில் வழங்கப்படும் 1,200
இட்லிகளும், மதியம் வழங்கப்படும் சாதமும் போதவில்லை. கூடுதலாக உணவுகள்
வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதிக அளவில் அம்மா உணவகங்களை திறக்க
முதல்வருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் செல்லம் பேசுகையில், அம்மா உணவகங்களுக்கு
மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3 ஆயிரம் நிதி வழங்குவதாகத் தீர்மானம்
கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசு நிதி வழங்கவில்லையா?, எந்த
நிதியில் இந்த உணவகங்கள் செயல்படுகின்றன? என்றார்.
ஆணையர் ஆர். நந்தகோபால் பதில் அளிக்கையில், அம்மா உணவகங்கள்
மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படுகின்றன. உணவகங்களுக்கு அரசு நிதி
ஒதுக்கீடு விரைவில் கிடைக்க உள்ளது. பராமரிப்பு பணிக்காக பினாயில்,
பாத்திரம் கழுவும் பவுடர் போன்றவை மாநகராட்சி பொது நிதியில் இருந்து
வழங்கப்படுகிறது, என்றார்.
தங்களது வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் திறக்க வேண்டும் என பல மாமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு மேயர் பதில் அளிக்கும்போது, ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள 10
அம்மா உணவகங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மீதமுள்ள 90 வார்டுகளிலும்
அம்மா உணவகங்களைத் திறக்க முயற்சி எடுத்து வருகிறோம். அரசின் அனுமதி
கிடைத்தவுடன், இந்த வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்படும், என்றார்.