தினமணி 12.12.2009
9000 குடிநீர் இணைப்புகள் : ஆணையர்
ராமநாதபுரம்,டிச.11: ராமநாதபுரம் நகராட்சியில் கேட்ட 7 தினங்களில் உடனுக்குடன் குடிநீர் இணைப்புகள் சுமார் 9000 வரை வழங்க தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் நகராட்சிக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 12.6.2009 முதல் காவிரிஆற்றிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நகரில் வசிக்கும் அனைவரும் பயன்பெறும் வகையில் இன்னும் 9000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். குடிநீர் இணைப்புக் கோரி உரிய டெபாசிட் தொகை குடியிருப்புகளுக்கு ரூ.5000. குடியிருப்பு அல்லாதவைகளுக்கு ரூ.15000 (கடைகள்)சிறப்பு கட்டடங்களுக்கு ரூ.25000 (மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள்) இவை திரும்பத் தரத் தக்கது. சாலை சேதாரம் சீரமைப்பு கட்டணம், மேற்பார்வை கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் அன்றே பணி உத்தரவு வழங்கப்படுவதுடன் 7 தினங்களுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
குடிநீர் இணைப்புக் கோருவோர் தங்களுக்கு அறிமுகமான பிளம்பர்களை கொண்டு தங்களது கட்டடங்களில் குழாய்களைப் பதித்த பின் நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தால் பகிர்மான குழாய்களிலிருந்து உடனுக்குடன் இணைப்புகள் வழங்கப்படும். பகிர்மானக் குழாய்கள் இல்லாத இடங்களில் பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணி ரூ.161லட்சத்தில் இம்மாத இறுதியில் நடைபெற இருப்பதால் அவ்விடங்களிலும் புதிய இணைப்புகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் லாரிகள் மூலம் பெறப்படும் தண்ணீரை தவிர்த்து இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிரந்தர பலன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இடைத்தரகர்களை தவிர்த்து நேரில் நகராட்சி அலுவலகத்தை அணுகிடுமாறும் நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்.