தினமணி 08.02.2010
கரூர் : 90,854 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
கரூர், பிப். 7: கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 90,854 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
கரூர் பேருந்து நிலையத்தில் குழந்தைக்கு சொட்டு மருந்தைப் புகட்டி, மாவட்ட ஆட்சியர் ஜெ. உமா மகேஸ்வரி முகாமைத் தொடக்கிவைத்தார். அப்போது ஆட்சியர் கூறியது:
2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் 3,212 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக கிராமப்புறங்களில் 768 மையங்களும், நகர்ப்புறத்தில் 38 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நடமாடும் மையமும் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளியூரிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டுவதற்காக கரூர் பேருந்து நிலையம், குளித்தலை பேருந்து நிலையம், கரூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில், தொடர்ந்து 3 நாள்களுக்கு முழுநேரமும் இயங்கும் வகையில் 4 சொட்டு மருந்து புகட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜன. 10-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட முகாமில் கரூர் மாவட்டத்தில் 89,937 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது. இதுவரை புதிய குழந்தைகள் 917 பேருக்கும் சேர்த்து 90,854 பேருக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள் தொடர்ந்து 3 நாள்கள் செயல்பட்டு விடுபட்டவர்களையும் கண்டறியும் பணியில் ஈடுபடுவர் என்றார் உமா மகேஸ்வரி.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் க. சதாசிவம், கரூர் நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (புள்ளியியல்) ஈஸ்வரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி. காளியப்பன், எஸ். முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.