தினமலர் 08.11.2013
சென்னையில் கட்டட அனுமதிக்கு காத்திருப்போர் 909 : நிலுவைக்கான காரணங்களை ஆய்வு செய்ய உத்தரவு
சென்னை : சென்னையில் கட்டட அனுமதிக்காக விண்ணப்பித்து 909 பேர் காத்திருக்கின்றனர். இத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டதன் காரணம் குறித்து, மண்டல பொரியாளர்கள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. கட்டட அனுமதி விண்ணப்பங்களை இணையம் மூலமே கொடுத்து, அனுமதி வாங்கும் அளவிற்கு எளிமையான திட்டங்கள் மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப் பட்ட பின்னும், வழக்கமான வழியில் தான் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, விழிப்புணர்வு இன்மையே காரணமாக கூறப்படுகிறது.இந்த ஆண்டு, வழக்கமான முறையில், இதுவரை விண்ணப்பித்தவர்களில், 909 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.அம்பத்துாரில் அதிகம் இதில், அதிகபட்சமாக, அம்பத்துார் மண்டலத்தில் 135 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதை தவிர பெருங்குடி, ஆலந்துார், மாதவரம் ஆகிய விரிவாக்க பகுதிகளிலும் அதிக நிலுவை உள்ளது.
இது குறித்து, தொடர்ந்து புகார்கள் எழவே, நிலுவையில் இருக்கும் விண்ணப்பதாரர்களின் முகவரி, அலைபேசி எண், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியல் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு உள்ளது.புகார் அனுப்பலாம் அதையடுத்து, ‘கட்டட வரைபட அனுமதி நிலுவையில் இருந்தால், விரைந்து பெற, mayor@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில், மேயரிடம் புகார்களையும், விண்ணப்பம், ஆவணங்கள் உட்பட கட்டட வரைபட அனுமதிக்கான ஆவணங்களையும் அனுப்பலாம்’ என, சம்பந்தப்பட்ட, விண்ணப்பதாரர்களின் அலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப, மேயர் கூறியுள்ளார்.இத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மண்டல பொறியாளர்கள் விளக்கம் அளிக்கவும், மேயர் உத்தரவிட்டு உள்ளார்.
மண்டல வாரியாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள்
திருவொற்றியூர்- 8
மணலி- 13
மாதவரம்- 93
தண்டையார்பேட்டை- 45
ராயபுரம்- 42
திரு.வி.க., நகர்- 63
அம்பத்துார்- 135
அண்ணா நகர்- 50
தேனாம்பேட்டை- 21
கோடம்பாக்கம்- 51
வளசரவாக்கம்- 42
ஆலந்துார்- 100
அடையாறு- 106
பெருங்குடி- 71
சோழிங்கநல்லுார்- 69
மொத்தம்- 909