தினமலர் 17.02.2010
பலமாடி ‘பார்க்கிங் டிசைன்‘ தயார்:ரூ.9.2 கோடியில் அமைகிறது
மதுரை : தற்போதுள்ள மதுரை சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் 9.2 கோடி ரூபாயில் பலமாடி வாகன காப்பக வளாகத்திற் கான டிசைன் தயார் செய்யப்பட்டுள்ளது.மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலையும், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சுகாதார கேட்டையும் ஏற்படுத்தும் சென்ட்ரல் மார்க்கெட் விரைவில் மாட்டுத்தாவணிக்கு இடம் மாற உள்ளது. இந்த இடத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் கிடப்பில் இருந்தது. இப்போது அதற்கு உயிர் வந்துள்ளது.சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள இடம் ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ளது. இதில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் வாகன காப்பகம் அமைக்கப்படும். வாகனம் நிறுத்துமிடத்தின் பரப்பு, 90 ஆயிரம் சதுர அடி. இதில் ஒரே நேரத்தில் 150 கார்கள், 200 இரு சக்கர வாகனங்கள், 10 பஸ்களை நிறுத்தலாம்.வரவேற்பறை, கழிப்பறை, குடிநீர், வாகனங்கள் செல்லும் வழி போன்றவை அமைகின்றன. சுற்றுலாவாசிகள் மட்டுமல்லாது அப்பகுதியை சேர்ந்தவர்களும் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்திற்கு மாநில அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. தற்போது மத்திய சுற்றுலா துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. புராதன சின்னங்களை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், நூறு சதவீத உதவியின் கீழ் இத்திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத்தாவணிக்கு இடம் மாறிய பிறகு, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.