தினமணி 08.02.2010
மளிகை, புத்தகக் கடைகளில் திடீர் ஆய்வு: 93 பேர் மீது நடவடிக்கை
நாகர்கோவில், பிப். 7: பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள் மற்றும் புத்தகக் கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 93 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்டத் தொழிலாளர் ஆய்வாளர் பொ. எலியாஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சென்னை சட்டமுறை எடையளவுகள் கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆய்வாளர் தா. மோகன், தக்கலை துணை ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள் ஏகாம்பரம், முருகா, கனகசபாபதி, ராஜ்குமார், ராமசாமி, குமரேசன் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது எடையளவு குறைவாக இருப்பதாக 22 ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், மளிகை, புத்தகக் கடை, காய்கறி, மீன், இறைச்சி கடைகள் என 461 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 93 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களின் முழு முகவரி, பொருள்களின் பெயர், நிகர எடை, அளவு, விற்பனை விலை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடாத பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.