மாநகராட்சி சார்பில் ரூ.95 லட்சத்தில் புதிதாக மின்விளக்குகள்
மதுரை மாநகராட்சி கே.கே. நகர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் இருந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரை ரூ. 95 லட்சம் செலவில், புதிதாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கே.கே.நகர் முதல் உயர் நீதிமன்ற கிளை வரை ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு
மொத்தம் 200 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 46 மின்கம்பங்களில் தலா 2 மின்விளக்குகளும், 154 மின்கம்பங்களில் தலா ஒரு மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால் ஆகியோர் புதிய மின்விளக்குகளை துவக்கி வைத்தனர்.
மேலும், மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூக்கடைகளுக்கு மேற்கூரை மற்றும் தளம் அமைக்கும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இதில், உயர் நீதிமன்றப் பதிவாளர் உதயன், மாநகராட்சி நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ. மதுரம், மண்டலத் தலைவர் ஜெயவேல், செயற் பொறியாளர்கள் சாந்தாராம், திருஞானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.