மாலை மலர் 30.09.2009
சென்னை மாநகராட்சி 96 கவுன்சிலர்கள் சொத்து கணக்கு தாக்கல் 89 பேருக்கு “நோட்டீஸ்”
சென்னை மாநகராட்சி விதிமுறைப்படி கவுன்சிலர்கள் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய மாநகராட்சி கவுன்சிலர்கள் 2006 முதல் 2009 வரை 3 ஆண்டுகளுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு வரை 25 கவுன்சிலர்கள் மட்டுமே முறையாக சொத்துக் கணக்கை தாக்கல் செய்திருந்தனர். மேயர் மா.சுப்பிரமணியன் அனைத்து கவுன்சிலர்களிடமும் உடனே கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக பல கவுன்சிலர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர். மேயர் மா.சுப்பிரமணியன், ஆளுங் கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல தலைவர்கள் டன்லப்ரவி, சண்முகசுந்திரம், க.தனசேகரன் உள்பட 96 கவுன்சிலர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 86 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மேயர் உத்தரவிட்டுள்ளார்.
கவுன்சிலர்களின் சொத்து விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடப்படுமா? என்று கமிஷனர் ராஜேஷ்லக்கானியிடம் கேட்ட போது சட்டத்துறையின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்றார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கவுன்சிலர்களின் சொத்து விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.