சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரியத்தின் 960 வீடுகளை காலி செய்ய உத்தரவு
கோவை: சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரியத்தினால் கட்டப்பட்டு பழுதடைந்த 960 வீடுகளை காலி செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட அறிக்கை:
வீட்டு வசதி வாரியம், சிங்காநல்லூர் திட்ட பகுதியில் 960 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பழுதடைந்த இந்த வீடுகளை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக வீடுகள் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை ஒதுக்கீட்டாளர்கள் மற்றும் குடியிருப்போருக்கு வழங்க அரசு முனைப்பு காட்டுகிறது. இங்கே வாடகைக்கு குடியிருப்பவர்கள், போக்கியத்திற்கு வசிப்பவர்கள் மற்றும் இதர வழிகளில் குடியிருப்பவர்கள் பழுதடைந்த தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டும்.
புதிதாக வீடுகள் கட்ட அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். 960 வீடுகளுக்கான ஒதுக்கீட்டாளர்களில் விற்பனை பத்திரம் பெற்றவர்கள், விற்பனை பத்திரம் இதுவரை பெறாதவர்கள் தாங்கள் செலுத்தவேண்டிய மொத்த நிலுவை தொகையை செலுத்தவேண்டும். விற்பனை பத்திரம் பெற்ற பின்னர் தங்களது வீட்டின் விற்பனை பத்திர நகல், அரசு வழங்கும் குடியிருப்பு விவர பட்டியல் மற்றும் உறுதி மொழி படிவத்தில் குடும்ப புகைப்படம் ஒட்டவேண்டும்.
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து கூட்டு நடவடிக்கை குழு வசம் ஒப்படைக்கவேண்டும். இதர குடியிருப்பாளர்கள் தாங்கள் இந்த திட்டத்தில் வசிப்பதை உறுதி செய்யும் வகையில் குடும்ப புகைப்படம் அடங்கிய உறுதி மொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும். புதிய குடியிருப்புகள் கட்டிய பின்னர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் வீடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 30 நாளுக்குள் விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும். படிவம் சமர்ப்பிக்காமல் தொடர்ந்து குடியிருப்பவர்கள் பேரிடர் தவிர்த்தல் அரசாணையின் படி எவ்வித முன்னறிவிப்பு இன்றி வெளியேற்றப்படுவர்.