தினமணி 08.02.2010
நாகை: 964 மையங்களில் அளிப்பு
நாகப்பட்டினம், பிப். 7: நாகை மாவட்டத்தில் 2-வது தவணை போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி 964 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, நாகை மாவட்டத்தில் ஜன. 10ஆம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி நடைபெற்றது. 1.54 லட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டுவதை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இப்பணியின் போது 1,55,153 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டப்பட்டது. 2-
வது தவணையாக போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், ஊட்டச்சத்து மையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்பட 964 மையங்களில் இந்தப் பணி நடைபெற்றது.
1.54 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவதை இலக்காகக் கொண்டு இப்பணி நடைபெற்றது. காலை நேரத்தில் ஏராளமானோர் வரிசையில் நின்று தங்கள் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டிச் சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, முகாம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, சொட்டு மருந்து புகட்டிடாத குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டும் பணியை முகாம் பணியிலிருந்த ஊழியர்கள் மேற்கொண்டனர்.
மருத்துவத் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை ஊழியர்கள், ஊட்டச்சத்துப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர், சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், சொட்டு மருந்து புகட்டும் பணியை நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் தொடக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அண்ணாதுரை, சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் வே. வைரமணி, உதவி இயக்குநர் ராம்தாஸ், மருத்துவர்கள் ராஜகுமாரி, ராஜமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.