தினமலர் 16.06.2010
கவுண்டம்பாளையம்– வடவள்ளி குடிநீர் திட்டம்: துவக்கி வைத்தார் துணை முதல்வர்
பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம் – வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தால் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பயன் பெறுவர்.
கவுண்டம்பாளையம் நகராட்சி, வடவள்ளி பேரூராட்சிக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம் வாயிலாக குடிநீர் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாள் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு 31 லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. இதனால் கவுண்டம்பாளையம்– வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் 31 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதால் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்க முடியும். இத்திட்டத்தின்படி, காரமடை அருகே உள்ள நெல்லித்துறையில் தலைமை நீரேற்று நிலையத்தில் நீர்சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டது. அங்கிருந்து பெறப்படும் நீர், செல்லப்பனூர் கிராமத்தில் உள்ள 11 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் வந்தடைகிறது. அங்கிருந்து வீரபாண்டியில் உள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்தை அடைகிறது. மீண்டும் அங்கிருந்து கவுண்டம்பாளையம் நகராட்சி அலுவலகம் முன் உள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்தை அடைகிறது.
இங்கிருந்து கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சேரன் நகர், எஸ்.பி.நகர், கவுண்டம்பாளையம், நடராஜ் நகர், அண்ணா நகர், அப்பாஸ் கார்டன், அருண் நகர் ஆகிய ஏழு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகளை அடைந்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தால் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தை கவுண்டம்பாளையம் நகராட்சி அலுவலகம் முன் உள்ள மைதானத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திட்ட செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். பின், திட்டத்தின் பெயர் பலகை, குடிநீர் பைப், கவுண்டம்பாளையம் நகராட்சி அலுவலகத்துக்கான முதல் தள அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கோவை எம்.பி.நடராஜன், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, கலெக்டர் உமாநாத், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி, குடிநீர் வடிகால் வாரிய மேலான்மை இயக்குனர் சுகன்தீப்சிங்பேடி, கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.