தினகரன் 22.06.2010
ஆங்கில பெயர் பலகைகள் 1,387 கடைகளில் ஒரே நாளில் அகற்றம் மேயர் அதிரடி நடவடிக்கை
சென்னை, ஜூன் 22: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இருக்க வேண்டும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். தமிழில் பெயர் பலகைகள் வைக்க ஜூன் 20ம் தேதி வரை மறு அவகாசம் வழங்கப்பட்டது.
காலக்கெடு முடிந்ததால் மாநகராட்சி மன்ற கூட்டம் முடிந்ததும், மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மன்ற எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அண்ணாசாலைக்கு நேற்று சென்றனர். அங்கு வாலஸ் சாலையில் உள்ள கடைகளில், தமிழில் இல்லாத பெயர் பலகைகளை அப்புறப்படுத்த மேயர் உத்தரவிட்டார்.
லிப்ட் வசதியுள்ள வாகனத்தில் ஏறி பெயர் பலகைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏஆர்ஆர்ஐ ஷாப் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த மிகப்பெரிய பெயர் பலகையை அவர்கள் வெட்டிச் சாய்த்தனர். அங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் விற்பனை கடைகளில் உள்ள ஆங்கில பெயர் பலகைகளை அகற்றினர். அகற்றப்பட்ட பெயர் பலகைகளை லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இதனால் அண்ணாசாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேயர் கூறும்போது, ‘தமிழ் பெயர் பலகை வைக்க இரண்டரை மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. 85 சதவீத கடைக்காரர்கள் தமிழில் பெயர் பலகை வைத்துள்ளனர். 15 சதவீத கடைகளில் மட்டுமே ஆங்கில பெயர் உள்ளது. 10 மண்டலங்களின் உதவி ஆணையர் தலைமையில், தமிழில் இல்லாத பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகிறது. இது உணர்வு ரீதியான பிரச்னை. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். நேற்று ஒரு நாளில் மட்டும் 1387 ஆங்கில பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் நகராட்சி பகுதிகளிலும் தமிழில் இல்லாத பெயர் பலகைகளை அகற்ற நகராட்சி தலைவர் துரைவேலு உத்தரவிட்டார். அதன்படி, சுகாதார அதிகாரி பழனிச்சாமி தலைமையில் ஆலந்தூர் எம்.கே.என்.சாலையில் உள்ள கடைகயில் ஆங்கில பெயர் பலகைகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. 100 கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. இன்று ஆதம்பாக்கம் பகுதியில் ள ஆங்கில பெயர் பலகைகள் அகற்றப்படுகின்றன.