தினமலர் 29.06.2010
தூத்துக்குடி மாநகராட்சி எரிவாயு தகன மேடை 3 நாளில் செயல்பட துவங்கும்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி எரிவாயு தகன மேடை இன்னும் 3 நாளில் செயல்பட துவங்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 47 லட்ச ரூபாய் செலவில் பிணங்களை எரியூட்டுவதற்காக எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்டி முடித்து பல மாதங்கள் ஆன நிலையில் தொடர்ந்து இவை பயன்பாட்டிற்கு மாசுகட்டுப்பாடு வாரியத்தில் இருந்து இதற்கான கிளியரன்ஸ் சான்று வராததால் எரிவாயு தகனமேடை செயல்படாமல் இருந்து வந்தது. இந் நிலையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் இந்த பிரச்னை கலெக்டரிடம் கொண்டு செல்லப்பட்டது.கலெக்டர் பிரகாஷ் இது குறித்து கூறுகையில், இதே நேரத்தில் அமைக்கப்பட்ட திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந் நிலையில் தூத்துக்குடி எரிவாயு தகனமேடை செயல்பட சென்னை மாசுகட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தற்போது மாநகராட்சிக்கு அனுமதி வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதற்கான அனுமதி வந்துள்ளது. இந்த அனுமதி வந்தவுடன் மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஜினியர் ராஜகோபாலன் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேற்று எரிவாயு தகன மேடைக்கு விறகுகள் கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது. முதல், முதலாக சோதனை செய்வதற்காக அனாதை பிணம் ஒன்று வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.மூன்று நாளில் சோதனை செய்யப்பட்டு இவை தொடர்ந்து செயல்பட துவங்கும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.