தினகரன் 29.06.2010
பெங்களூர் மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் பணி நீக்கம்
?பெங்களூர்
, ஜூன் 29:பெருநகர் மாநகராட்சியில் உள்ள அலுவலகங்களில் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்ற கியோனிக்ஸ் நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 396 கம்ப்யூட்ர் ஆபரேட்டர்கள், 400 டைப்ரைட்டர்கள் இவ்வாறு பணியாற்றி வந்தனர். இவர்கள் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் கோரி அடிக்கடி போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும்
794 ஊழியர்களின் ஒப்பந்தம் வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. இவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளமும் வழங்கப்படவில்லை. இவர்கள் மீண்டும் தொடருவார்களா? அல்லது வீட்டிற்கு அனுப்பப்படுவார்களா? என்பதை ஒப்பந்தம் எடுத்துள்ள கியோனிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.கர்நாடக மாநில ஒப்பந்த தொழிலாளர் சட்டம்
5வது பிரிவின் படி புதிய ஒப்பந்தம் பெற 2 மாதங்களுக்கு முன் டெண்டர் விட வேண்டும். பழைய தொழிலாளர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் 3 மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும், அப்படி வழங்காமல் வேலையில் இருந்து வெளியேற்றினால் 2 மாதம் சம்பளம் கொடுத்து அனுப்ப வேண்டும். இப்படி சட்ட நெருக்கடி உள்ள நிலையில், மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 794 ஊழியர்கள் பணியில் தொடர்வார்களா அல்லது நீக்கப்படுவார்களா என்று பரபரப்பு நிலவுகிறது.