தினகரன் 30.06.2010
மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கினால் தொலைபேசி மூலம் புகார் செய்யலாம் மாநகராட்சி அறிவிப்பு
புதுடெல்லி, ஜூன் 30: மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கினால், தொலைபேசி மூலம் புகார் செய்யலாம். அதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுபற்றி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் விரைவில் பருவமழை தொடங்க இருக்கிறது. அப்போது சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக மாநகராட்சிக்கு தொலை பேசி மூலம் புகார் செய்யலாம். அந்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட இடங்களுக்கு நிவாரணக் குழு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்.மேலும், தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைகளில் மரம் விழுந்திருந்தாலோ, கழிவு நீர் குழாய்கள் திறந்து கிடந்தாலோ, கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தாலோ உடனடியாக புகார் கொடுக்கலாம்.
மழை வெள்ளத்தால் சாலைகளில் இறந்து கிடக்கும் நாய், ஆடு, போன்ற விலங்குகளை அகற்றவும், சுகாதார வசதி பற்றியும் புகார் செய்யலாம். வாடிக்கையாளர்களின் புகார்களை பெறுவதற்காகவே தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. டெலிபோனில் தகவல் சொல்லலாம். புகார் கிடைத்த உடனே சம்பவ இடங்களுக்கு அதிகாரிகள் செல்வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.