தினமணி 31.07.2009
மாநகர வளர்ச்சிப் பணிகள்: அரசு செயலர் ஆய்வு
திருச்சி, ஜூலை 30: திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் டாக்டர் நிரஞ்சன் மார்டி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 144 கோடியில் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் பிரதான நீர் சேகரிக்கும் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.
பழுதடைந்த தார்ச் சாலைகள், கான்கிரீட் சாலைகள் ஆகியவற்றை ஜெர்மானிய வங்கியின் உதவியுடன் ரூ. 24.30 கோடியில் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சிறப்புத் திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் டாக்டர் நிரஞ்சன் மார்டி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தில்லைநகர் சாலைப் பணியில் நடுவில் வெள்ளை வண்ணம் பூசவும், இருபுறமும் மஞ்சள் வண்ணம் பூசவும், ஒளிரும் பிரதிபலிப்பான்கள் அமைக்கவும் அறிவுரை வழங்கினார். மேலும், தென்னூர் அண்ணா நகரிலிருந்து உய்யகொண்டான் ஆற்றுக்கு குறுக்கே லாரன்ஸ் சாலையை இணைக்கும் ரூ. 3.20 கோடியிலான இணைப்புச் சாலை அமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, கருமண்டபம் பகுதியில் ரூ. 1.17 கோடியில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியையும் நிரஞ்சன் மார்டி பார்வையிட்டார்.
பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுத்தினார் அவர்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, நகராட்சி நிர்வாக இயக்கக தலைமைப் பொறியாளர் ரகுநாதன், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, கோட்டத் தலைவர் த. குமரேசன், நிர்வாகக் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், வாட்டர் எய்டு மற்றும் பவர் கன்சல்டன்சி சேவை நிறுவனப் பிரதிநிதிகள் சுப்பாராஜ், வடிவேல் ஆகியோரும் உடனிருந்தனர்.