தினமலர் 21.07.2010
குப்பை பிரச்னைக்கு தீர்வு காண 669 துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சிக்கு தேவை அரசுக்கு கருத்துரு அனுப்ப திட்டம்
திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் மாநகராட்சியின் தேவையை கருத்தில் கொண்டு மேலும் 669 துப்புரவு பணியிடங்களை தோற்றுவிக்குமாறு அரசுக்கு கருத்துரு அனுப்ப திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 400 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. 27.20 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள மாநகராட்சியில் 1.08 லட்சம் குடியிருப்புகள் உள்ளதாக மாநகராட்சி கணக்கிட்டுள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மாநகராட்சியில்மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப குப்பைகள் மற்றும் கழிவுகளும் அதிகரித்து வருகின்றன.
ஆனால், மாநகரில் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் மிக குறைவான அளவே உள் ளது. மாநகரில் தற்போதைய தேவைக்கு 1488 பணியாளர்கள் தேவை என்ற நிலையில், தற்போது வெறும் 819 துப்புரவு பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், இந்த பணியிடங்களை தோற்றுவித்து பணியாளர்களை நியமனம் செய்ய தமிழக அரசை கோர மாநகராட்சி முடிவு செய்துள்ளனர்.
“தமிழக அரசின் உத்தரவுப்படி, திருப்பூர் மாநகராட்சியில் 1488 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 819 பணியிடங்கள் மட்டுமே உள்ளது. எனவே மீதமுள்ள 669 பணியிடங்களை தோற்றுவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கருத்துரு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வைக்கப்படுகிறது. கூட்டத்தின் ஒப்புதலுக்கு பின்னர் இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று 2 வார்டுகளுக்கு ஒரு கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர் வீதம் 26 கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர் பணியிடங்களை தோற்றுவிக்கும் தீர்மானமும் மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது,” என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவ்விரு தீர்மானங்களும் நாளை (22ம் தேதி) நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் முன்வைக்கப்படுகிறது. மாமன்ற ஒப்புதல் வழங்கிய பின்னர், இது தொடர்பாக கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.