தினகரன் 26.07.2010
சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு கூடுதல் பாலாற்று தண்ணீர் தாம்பரம் எம்எல்ஏ உறுதி
தாம்பரம், ஜூலை 26: ‘சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு கூடுதலாக பாலாற்று நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ உறுதி அளித்துள்ளார்.
சிட்லபாக்கம் பேரூராட்சியில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்ட பொதுமக்கள், செம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும், ஏரியில் குப்பை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையை சீரமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், முதியோர், விதவை உதவி தொகை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு போன்றவை உட்பட ஏராளமான கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும், அதன் விவரத்தை வழங்கவும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.
அப்போது, “பேரூராட்சிக்கு தினமும் 9 லட்சம் லிட்டர் பாலாற்று தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், வீட்டு இணைப்புகளுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை, கூடுதலாக 25 ஆயிரம் லிட்டர் கிடைத்தால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கலாம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீர் வாரியத்திடம் இருந்து கூடுதலாக பாலாற்று தண்ணீர் பெற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ராஜா எம்எல்ஏ உறுதி கூறினார். நிகழ்ச்சியில், சிட்லபாக்கம் வருவாய் ஆய்வளார் சரவணன், செயல் அலுவலர் (பெறுப்பு) வெங்கடசன், உள்ளாட்சி உறுப்பினர்கள், பொது நலசங்கத்தினர் கலந்து கொண்டனர்.