தினமலர் 30.07.2010
பாதாள சாக்கடை திட்டம் 2 ஆண்டில் நிறைவடையும் நகராட்சி சேர்மன் தகவல்
நாமக்கல்: “”பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக பணிகள் முடிவடைந்து விடும்,” என, நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் சேர்மன் செல்வராஜ் தெரிவித்தார்.நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம், சேர்மன் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:சேகர் (அ.தி.மு.க.,): நகராட்சிப்பகுதியில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக சாலை போடவே இல்லை.செல்வராஜ் (சேர்மன்): துணை முதல்வரிடம் ஒப்புதல் பெற்று, 5 கோடி ரூபாய்க்கு பணிகள் செய்யப்படும்.ரவிச்சந்திரன் (தி.மு.க.,): மணல் லாரிகள் நகருக்குள் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 8 முதல் 10 மணி வரை லாரிகள் நகருக்குள் வருவதை தடை செய்ய வேண்டும்.சேர்மன்: சேலம், திருச்செங்கோடு சாலை வழியாக வரும் லாரிகள், பை–பாஸ் சாலையில் செல்கிறது. இருப்பினும் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும்.சுப்ரமணி, சேகர் (அ.தி.மு.க.,): பஸ் ஸ்டாண்டில் இருந்து இரு கடைகள் பூடப்பட்டது. பின், திறக்கப்பட்டது. பூட்டு போடுவதற்கும், திறப்பதற்கும் நகராட்சியினர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.சேர்மன்: தவறாக விளம்பரம் கொடுக்கப்பட்டதால், அந்தக் கடைகள் பூட்டப்பட்டன. உரிய ஆவணங்கள் காண்பித்ததையடுத்து கடைகள் திறக்கப்பட்டது. எனினும் அந்தக் கடைகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. நிச்சயம் கடைகள் ஏலம் விடப்படும்.பூபதி (துணை சேர்மன்): நகராட்சியில் ஒரு வேலையும் நடப்பதில்லை. எந்தப் பணியையும் எடுப்பதற்கு ஆள் இல்லாததே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
சேர்மன்: டெண்டர் எடுக்க ஆட்கள் தயாராக உள்ளனர். கமிஷனர் தொடர்ந்து மாற்றப்படுவதால், பணிகளை எடுத்து செய்ய தயங்குகின்றனர்.ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.,): பாதாள சாக்கடை திட்டம் 18 மாதங்களுக்குள் முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டது; எப்போது முடியும்? இரண்டு ஆண்டுக்கு முன், நகராட்சி குடிநீர் குழாய்களுக்கு ஃப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தப்பட்டது. தற்போது அவை பொறுத்தப்படுவதில்லை ஏன்?
சேர்மன்: பாதாள சாக்கடை திட்டப் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. முழுமையாக நிறைவு பெற இன்னும் இரண்டு ஆண்டுகளாகும். ஆர்.ஓ., பிளாண்ட் அமைப்பதற்காக, டெண்டர் விட ஒன்றரை ஆண்டுகள் தேவை. ஒரு சில ஏரியாவில் உள்ள பிரச்னை காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஃப்ளோ கண்ட்ரோல் வால்வு பொறுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.தொடர்ந்து, மாட்டிறைச்சி கடைகள் அனைத்தும் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை அனைத்தும் தமிழில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உட்பட அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) முகமது மூஷா, மேலாளர் கலைமணி உட்பட பலர் பங்கேற்றனர்.