தினமணி 30.07.2010
கோபி நகர்மன்றக் கூட்டத்தில் கூச்சலால் தீர்மானங்கள் ஒத்திவைப்பு
கோபி, ஜூலை 29: கோபி நகராட்சி கூட்டம் நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 40 தீர்மானங்களையும், உள்ளூர் திட்ட குழுமம் தொடர்பான 27 தீர்மானங்களையும் கொண்டு வர இருந்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன், திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து கோபி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொகுதி மேம்பாட்டு நிதி 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அதிமுக, மதிமுக, தேமுதிக உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாக புகார் கூறினார்கள்.
இதைத் தவிர்த்து அனைத்து வார்டுகளுக்கும் சமமான முறையில் பிரித்து வழங்க வேண்டும் என்றனர்.
இதனால் இந்த தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறி திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்ட கடிதத்தை திமுக உறுப்பினர் குழுத் தலைவர் திலீப், நகர்மன்றத் தலைவர் ரேவதி தேவியிடம் கொடுத்தார். பின்பு, திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர், கூட்டத்தை 10 நிமிடம் ஒத்திவைப்பதாக கூறி தனது அறைக்குச் சென்று விட்டார். மீண்டும் வந்தபோதும் கூச்சல் தொடர்ந்தது. இதையடுத்து நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி அனைத்து தீர்மானங்ளையும் ஒத்திவைப்பதாக கூறி கூட்டத்தை முடித்தார்.
இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், நகராட்சி முன்பு வந்து நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்பு நகராட்சி முன்பு உள்ள காந்தி சிலையிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.