தினகரன் 30.07.2010
பராமரிப்பு ஒப்பந்தம் மீறல் தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடர நகராட்சி முடிவு
தாம்பரம், ஜூலை 30: ஒப்பந்தப்படி நகராட்சி மருத்துவமனையை பராமரிக்காததால், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடரவேண்டும் என்று தாம்பரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தாம்பரம் நகராட்சி கூட்டம், அதன் தலைவர் மணி தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், “கிழக்கு தாம்பரத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையை தத்தெடுத்து பராமரிப்பதாக தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்ததுள்ளது. நகராட்சியும் அனுமதி அளித்தது. அதை வைத்துதான், அந்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை தொடங்க டெல்லியில் அனுமதி பெற்றது. ஆனால், நகராட்சி மருத்துவமனையை பராமரிக்கவில்லை. இதனால், தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
கவுன்சிலர்கள் ரத்தினகுமார் (திமுக), வேணுகோபால், ஷீலா (காங்) ஆகியோர், ‘தரமற்ற பொருட்களை வைத்து பாதாள சாக்கடை கட்டப்படுகிறது.
கவுன்சிலர்கள் கேள்வி கேட்டால், ஒப்பந்ததாரர்கள் தரக்குறைவாக பேசுகின்றனர். எனவே, தனி அதிகாரி நியமித்து பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனர்.
பிரபாகர் (அதிமுக), புவனேஸ்வரி (திமுக) ஆகியோர், ‘அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் செல்போன் தரப்பட்டுள்ளது. ஆனால், புகார் தெரிவிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டால், பெரும்பாலான நேரங்களில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
தலைவர் மணி பேசியதாவது, ‘கேளம்பாக்கத் தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒப்பந்தத்தை மீறி விட்டது. வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தி, செட்டிநாடு மருத்துவமனை மீது வழக்கு தொடரப்படும். பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்ய தனி அதிகாரி நியமிக்க நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்படும்’ கூட்டத்தில், 95 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.