தினகரன் 06.08.2010
டெங்கு பாதிப்பு 76 ஆக உயர்வு கொசு பரவலுக்கு காரணமான 37,187 பேருக்கு நோட்டீஸ்
புதுடெல்லி, ஆக. 6: டெல்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் டெல்லியில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இந்த சீசனில் டெல்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை டெங்குவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். அவர் பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டார். டெல்லி வந்தபிறகே அவருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மருத்துவமனையில் அவர் இறந்தார்.
டெங்கு ஒருபக்கம் பரவினாலும், இன்னொரு பக்கம் மாநகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “இதுவரை 1 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 602 வளாகங்களில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தியதில், 37,187 வீடுகளில் தேங்கியிருந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், 3,942 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
2009ம் ஆண்டில் டெல்லியில் மொத்தம் 1153 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் இறந்தனர். 2008ம் ஆண்டில் 1312 பேர் பாதிக்கப்பட்டனர். இருவர் இறந்தனர். 2007ம் ஆண்டில் டெங்குவின் தாக்கம் குறைந்திருந்தது. 548 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஒருவர் இறந்தார். 2006ம் ஆண்டில்தான் டெங்கு காய்ச்சல் கடுமையாக பரவியது. 3366 பேர் பாதிக்கப்பட்டனர். 36 பேர் இறந்தனர்.